தடம் புரண்டதில் தவறில்லை! தாய்மதம் திரும்புவீர்!!

திசெம்பர் 31, 2008

குமுதம் ஜோதிடம் இதழில், ஏ.எம்.ஆர் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை, இதோ உங்களுக்காக!

 

ந்துக்கள் கபடமற்ற மனம் கொண்டவர்கள்! எவரையும் அவர்கள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதில்லை!! அவ்விதம்தான், கேரளக் கடற்கரையில் வந்திறங்கிய கிறிஸ்துவப் போர்த்துக்கீசியர்களை இந்துக்கள் அன்புடன் வரவேற்று, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

“அதிதி தேவோ பவ….” என்கிறது வேதம். வீட்டிற்கு வரும் அதிதிகள் – அதாவது, விருந்தினர்கள் – தெய்வத்திற்குச் சமம் என்று பொருள்.

இந்த வேத வாக்கியத்தை, இந்துக்கள் என்றும் மறந்ததில்லை. ஆதலால்தான், நம் நாட்டிற்கு `வியாபாரம்’ செய்ய வந்ததாகக் கூறிய போர்த்துக்கீசியரை வரவேற்று உபசரித்தனர் நம் மக்கள்!

ஆனால்! ஆனால்!! இத்தகைய கள்ளம், கபடமற்ற தூய அன்பிற்கு நமக்குக் கிடைத்த பரிசுகள்தான் என்ன?

சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம்!

ஆயிரக்கணக்கான கோயில்கள் கிறிஸ்துவப் போர்த்துக்கீசியர்களால் கொள்ளையடிக்கப்பட்டபின், தரைமட்டமாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான சிவாச்சாரியர்களும், பூசாரிகளும், பட்டாச்சாரியார்களும் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். நம் திருக்கோயில்கள் இருந்த இடங்களில் அவர்களது `சர்ச்சுகள்’ நிர்மாணிக்கப்பட்டன. மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.

போர்த்துக்கீசியர் காட்டிய வழியை, ஆங்கிலேயர்களும், பிற கிறிஸ்துவ நாட்டினரும், முகம்மதியர்களும் அதைவிடக் கொடூரமான முறைகளில், இந்து சமூகத்தினரையும், அதன் கலாச்சாரம், பண்புகள் ஆகியவற்றையும் அழித்தனர்.

சுதந்திரம் பெற்ற பின்பு..!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பாவது இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமென எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே.  

அன்பு காட்டிய நம்மிடம் இவ்விதம் சிறிதளவும் நன்றியுணர்வு இல்லாத கிறிஸ்தவ மதமாற்ற போதகர்களை, ஈராக், சிரியா, சௌதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் எவ்விதம் நடத்துகின்றன என்பதை 28.12.2008 தேதியிட்ட `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் அவர்கள் படித்துப் பார்க்கட்டும்! அந்தச் செய்தி இதோ:- 

“ஈராக் நாட்டின் மோசூல் என்ற நகரிலிருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் வீடு, வாசல்களைத் துறந்து, தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டு பாதிரிமார்களும், உறவினர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். காரணம் இவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதே. 

மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இந்துக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மதபோதகர்கள் முஸ்லிம் நாடுகளில் அவர்கள் அழிக்கப்படுவதையும், பாரதத்தின் இந்துக்கள் காட்டிவரும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தாவது தங்கள் மதமாற்றச் செயல்களை நிறுத்திக்கொள்வார்களா?  இந்துக்கள் காட்டிய அன்பிற்கு, இந்துக்களின் அன்பிற்குக் கிடைத்துவரும் பரிசுதான் மதமாற்றம் என்னும் ஏமாற்று வித்தையா? 

 

நன்றி: குமுதம், ஏ.எம்.ஆர்

இந்துத்தீவிரவாதம்!

திசெம்பர் 20, 2008

எனது வலைப்பதிவிற்கு இது சற்றே பொருந்தாத பதிவு போல் தோன்றினாலும், இன்றைய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். இதைப் பற்றி எழுத வேண்டுமென்று எனக்கு நெடுநாளாக எண்ணம் இருந்த போதிலும், சரி வர கருத்துக்களை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இந்நிலையில்தான் பிரான்கோஇஸ் காஷியரின் இப்பதிவைப் பார்க்க நேர்ந்தது. சரி, எனது பதிவை மீண்டும் துவக்க இதுவே சரியான தலைப்பு என்று தோன்றியது. அவரது கருத்துக்களுடன் என் கண்ணோட்டமும் இணைந்து, உங்களுக்காக.

 

இந்துத்தீவிரவாதம் என்று ஏதேனும் உள்ளதா? அண்மையில் நடந்த பல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இச்சொல்லை பத்திரிக்கைகள் வழியாகவும், இணையத்திலும் பரப்பி வருகின்றன. அதற்க்கு முத்தாய்ப்பாய் பிரக்யா சிங்கின் கைது, சர்ச்சைக்குரியஉரையாடலின் ஒலிப்பதிவு என எங்கும் பரபரப்பு. ஏதாவது சந்தர்ப்பம் கிட்டாதா என காத்துக் கிடந்த முஸ்லீம் இயக்கங்களுக்கும், கம்யுநிச்ட்களுக்கும் வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்தாற்போல் இந்த நிகழ்வு அமைந்து விட்டது. விளைவு? இந்துத்தீவிரவாதம் என்னும் புதிய சொல் அகராதியில் ஏற்றப்பட்டு விட்டது.

 

எத்தனை மதங்கள் வந்த போதும், சென்ற போதும், கோடிக்கணக்கானோர் மத மாற்றம் செய்யப் பட்ட போதும், பாரதத்தின் பெருமை, கலாசாரம், இந்து மதத்தில்தான் அமைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. வந்தாரை வாழ வைத்ததோடு நில்லாமல், அவர்களது கொள்கைகளையும், மதக் கோட்பாடுகளையும் தன் மண்ணில் வளர விட்ட பெருந்தன்மை இந்து மதத்தையும், இந்துக்களையும் தவிர வேறு யாரைச் சேரும் இங்கு? அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழும் இந்துக்களின் கோபத்தின் வெளிப்பாட்டை சிமி போன்ற மனிதமற்ற இயக்கங்களோடு சமப்படுத்தி பேசுவது வேதனைக்குரியது. மங்களூரில் இந்து மதத்தை, அதன் கோட்பாடுகளை அசிங்கப்படுத்திய ஒரு சர்ச்சைத் தாக்கியதற்கு, புஷ்ஷிடம் மன்னிப்பு கேட்கிறார் நம் பிரதமர். ஆஸ்திரேலியாவில் ஒரு முஸ்லீம் தீவிரவாதி சிறைப்பட்டதால் தன் தூக்கம் பொய் விட்டதாக பொது அறிக்கை கொடுக்கிறார். என்ன நடக்கிறது இங்கு?

 

ஒரு உயிர்ச்சேதமும் இல்லாத பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு பல வருடங்கள் ஆன பின்னும், இன்றும் அது நினைவு கூறப்படுகிறது. எத்தனை குண்டு வெடிப்புகள்? எத்தனை உயிரிழப்புகள்? யாரேனும் அதைப் பற்றி விவாதிக்கின்றனரா? இது இன்று நேற்றல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் கொடுமை. தைமூர் லட்சக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்த போதும், போர்ச்சுக்கீசியர்கள் பிராமணர்களை கோவாவில் கூண்டோடு அழித்த போதும் வராத ரோஷம் இந்துக்களுக்கு இப்போதா வந்து விடப் போகிறது என்ற எண்ணமே இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் காரணம். அது சிறிதே தலைகாட்டினால் அதன் பெயர் தீவிரவாதம்.  எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்துக்களுக்கு பாதகமாகவே நடந்து கொள்ளும் போதும், இது வரை பொறுமை காத்த இந்துக்கள் சற்றே கோபப்பட்டால் அதன் பெயர் தீவிரவாதம்.

பல லட்சம் பண்டிதர்கள் இருந்த காஷ்மீரில் இன்று சில நூறு பேரே எஞ்சியுள்ளனர். அதனைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கேள்வி எழுப்புமா? எந்த நண்பராவது தன் வலைப்பதிவில் எழுதுவாரா? பெரும்பான்மை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இனத்தை இதற்குமேல் யாரும் வஞ்சித்திருக்க இயலாது. ஹஜ் பயணத்திற்கு முழு செலவும் ஏற்றுக்கொள்ளும் அரசு அமர்நாத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர இயலவில்லை. ஒரு முஸ்லீம் தீவிரவாதிக்காக துக்கப்படும் பிரதமர் ஆயிரக்கணக்கான பாமரர்களை பணத்தைக்காட்டி மத மாற்றம் செய்பவர்களை தட்டிக்கேட்ட 80 வயது முதியவரின் கொடூர கொலைக்கு வருத்தப்படவில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மை இந்நிலையில் இருக்கையில், கோபப்படாதீர்கள் என்று எத்தனை காலம் கட்டுப் படுத்த இயலும், முதுகெலும்பில்லாத என் இந்து சகோதரர்களை?

பயணம் தொடர்கிறது…

திசெம்பர் 20, 2008

நெடு நாட்களாக இப்பதிவை தொடராமல் இருந்ததற்கு மன்னிக்கவும். காலம் கிடைத்த போதும் வேளை சரி வர அமையவில்லை. இனி இப்பயணம் இடையறாது இடரேதுமின்றி தொடரும் என நம்புகிறேன்.

நீண்டதொரு இடைவெளி

ஓகஸ்ட் 26, 2008

நான் சற்றும் எதிர்பாரா வகையில் வாழ்வில் திருப்பங்கள். வேலைப்பளு வேறு அதிகமாகி என்னை வேறு எது பற்றிய சிந்தனையும் இல்லாமல் செய்து விட்டது. எவ்வளவோ முறை முயன்றும் எனது வலைப்பூவில் புதிய பதிவுகள் இட நேரமும், சூழ்நிலையும் அமையவில்லை என்பது வருத்தமே. இப்போதும் வேலைப்பளு சிறிதும் குறையவில்லை. இன்னமும் பிராமண  துவேஷம் சிறிதும்  குறையாது இருப்பது அதனை விட மிகப்பெரிய வருத்தம். இன்னும் சொல்லப்போனால், இணையத்தில் இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியைக் காட்ட இயலுமா என்று வியக்கும் அளவுக்கும், முகம் சுளிக்கும் அளவுக்கும் இருக்கின்றன சில பதிவுகள். இப்பதிவாளர்கள் உண்மையிலயே படித்தவர்களா, பண்பாளர்களா என்பது சர்ச்சையே இல்லாமல் அவர்கள் எழுத்துக்களின் மூலமே நிரூபிக்கப் பட்டு வருகிறது. யாரையும் பெயர் குறிப்பிட்டு அவர்கள் அளவுக்கு என் நிலையை நான் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

நான் செய்ய விரும்புவதெல்லாம் தன்னிலை விளக்கம், காழ்ப்புணர்ச்சியினால் காயப்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் தன்னிலை விளக்கம். பொய்யான வரலாற்றுக் கதைகளாலும், புனையப்பட்ட நிகழ்வுகளாலும் நடுநிலையாளர்கள் நிலை தடுமாறி அநீதிக்கு வழி விடக்கூடாதே என்ற எண்ணம். அவ்வளவே நான் இங்கு செய்ய விரும்புவது. கீழ்த்தரமான, கொச்சையான வார்த்தைகளால் எனை சாடும் நண்பர்கள் தாங்கள் தங்களையே தாழ்த்திக் கொள்கிறார்கள். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் அறிவிலி நான் அல்ல.

ஆக, ஒரு (பெரிய) இடைவெளிக்கு பிறகு என் எழுத்துப்பணி தொடர்கிறது என்பதே நான் சொல்ல வந்த தகவல்.

—————– சர்வே ஜனா சுகினோ பவந்து  ———————

மனு தர்மமும் மானிடமும் – பாகம் 2

ஏப்ரல் 20, 2008

முந்தைய பாகத்தில் மனு ஸ்மிருதி என்பது என்ன என்பதைப் பற்றியும், அதிலிருந்து சில விளக்கங்களையும் பார்த்தோம். இப்பாகத்தில் மனு ஸ்மிருதி பற்றி மேலும் அலசுவோம்.

பின்வரும் ஸ்லோகங்கள் மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ளன.

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது.  இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே
அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:

அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன் பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.

பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை  அணுகும் முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும் இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை – மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே.  ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர் செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம் முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்! 

எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்!  அது மனு தர்மத்திற்கும் முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன் அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.
இதற்க்கு மேலும் மனுவின் தர்மங்கள் பிராமணர்களுக்கு சாதகமாகவும் மாற்ற வர்ணத்தவருக்கு பாதகமாகவும் வகுக்கப் பட்டுள்ளன என்று கூச்சலிடும் இன்றைய பகுத்தறிவாளிகளில் (?) நீங்கள் ஒருவராக இருப்பின் உங்களுக்காக இன்னும் சில உண்மைகள் தொடர்கின்றன.

நான் முந்தைய பதிவில் சொன்னதுபோல் மனு பிராமணர்களுக்கு சில சலுகைகளை வழங்கினாலும், மிகக் கடுமையான விதிகளை விதிக்கிறான். வேதம் ஓதி, சாஸ்திர முறைப்படி வாழாத பிராமணனை மனு தர்மம் மிகக் கடுமையாக அணுகுகிறது.

‘மற்றவர் பொருளில் விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு, பொறாமை உடைய பிராமணன் பூனையின் குணம் கொண்டவன். இப்படிப்பட்ட குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான். பூனை குணம் கொண்ட பிராமணனுக்கோ, விரதமுடையவன் போன்ற வேடம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களை முறையாகப் பயிலாத பிராமணனுக்கோ, நன்னடத்தை கொண்ட எவனோருவனும் ஒரு சிறிய தானத்தைக் கூட செய்து விடுதல் கூடாது. அவ்வாறு செய்தால் தானம் வாங்கியவனோடு சேர்ந்து தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான்.’  இதனை, நான் சொல்லவில்லை, பிராமணனுக்கு சலுகைகள் பல வழங்கி மற்றவர்களை ஒடுக்கியதாக பிராமண துவேஷர்கள் சொல்லும் மனு தர்மம் சொல்கிறது.

மீண்டும் சொல்கிறேன், பிராமணர்களுக்கு சிற்சில சலுகைகளை வழங்கினாலும் அவர்கள் மீது பற்பல சுமைகளை ஏற்றுகிறது மனுஸ்மிருதி. இருப்பினும் மனுதர்மம் தவறானது, பேதங்களைக் கற்பிப்பது. இன்றைய இந்திய அரசியல் சாசன சட்டமோ, வெறும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, வேலையில் பணி உயர்வு, கல்வியில் பண உதவி என எண்ணிலடங்கா சலுகைகளை வழங்குகிறது. அவ்வாறு சலுகை பெறுவோருக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. இத்தகைய சட்டம் உயரியது, சிறப்பானது. இவ்வாறு காமாலைக் கண்ணோடு எதனையும் பார்ப்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது, எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும் விளங்காது.

அனைத்திற்கும் மேல் நான்கு வர்ணங்களைத் தவிர ஐந்தாவது பிரிவு என்றொன்று கிடையாது என்பதை மனு தர்மம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. எனவே, ‘தாழ்த்தப்பட்டவர்’ என்ற ஒன்று இந்த சாதீய முறை வந்த பின்னரே தோன்றியுள்ளது. ‘சாதி’ என்ற வார்த்தையே இல்லாத மனுஸ்மிருதியை இதற்க்கு எவ்வாறு குற்றம் கூற இயலும். நான் ஏற்கனவே சொன்னது போல், ‘தீண்டாமை’ என்ற ஒரு தவறை அனைத்துத் தரப்பினரும் இழைத்துள்ளனர். இன்றும், இந்த கொடுமைகளை செய்பவர்களில் அநேகர் பிராமணரல்லாதோரே. உண்மை அவ்வாறிருக்க, பிராமணரை மட்டும் சாடி வருவது வெறும் சாதி அரசியலே. வெறும் 3% உள்ள பிராமணர்களுக்கு எதிராக மற்ற 97% மக்களிடம் துவேசத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் ஓட்டைப் பெறுவதற்கு. பாவம், இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாவது ஏழை பிராமணர்களே.

இன்று நடைமுறையில் இல்லாத ‘மனுஸ்மிருதி’ என்ற ஒரு விஷயத்திற்காக கூட்டம் போட்டு, பிராமணர்களை மானாவாரியாகத் திட்டி தீர்மானங்கள் எழுப்பும் எனதருமை உடன்பிறப்புகளே! மனுஸ்மிருதி நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை சில நாழிகை ஒத்தி வைப்போம். கடந்த மாதம் திருநெல்வேலியில் தகாத உறவு கொண்டமைக்காக ஒரு முஸ்லீம் சகோதரியைக் கல்லால் அடித்தே கொன்றுள்ளனர். இவ்வாறான இன்றளவும் தொடரும் கொடுமைகள் நடக்கும் பொது தாங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்?

அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)

பொருள்:  உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!

 —தொடரும், அகத்தெளிவு பிறக்கும் வரை—-

மனு தர்மமும், மானிடமும்

ஏப்ரல் 5, 2008

இந்து சாஸ்திரங்களுக்காக போராடும் நம் நண்பர்களே சிறிது அடங்கிப் போகும் ஒரு விஷயம் மனு ஸ்மிருதி. ஏனெனில், இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற ஒரு கருத்து அனைவரது (இந்துக்கள், பிராமணர்கள் உட்பட) ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.

பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும் தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா யுகத்திற்க்கானது. இதை கலி யுகத்தில் பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த முதல் தவறு. ஆயினும், மனு ஸ்மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.

முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள் அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது ஆச்சர்யமே!

மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.

பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?

‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம் நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான் அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி, சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம் ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி தவறாகத்தான் தெரியும்.

மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும் அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில் தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத் தகுந்ததாக கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ, குற்றங்களைத் தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.

பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான் இதையும் சொல்கிறது


                                       அஷ்டோபாத்யம் து சூத்ரச்ய
                                       ஸ்தேயே பவதி கில்பிஷம்.
                                       ஷோடசைவ து வைச்யச்ய
                                       த்வாத்ரிம்சத் க்ஷத்ரிச்ய  ச.
                                       ப்ராம்மனச்ய சது: ஷஷ்டி:
                                       பூர்ணம் வாபி சதம் பவேத்.
                                       த்விகுணா வா சது.
                                      ஷஷ்டி: தத் தொஷகுனா வித்தி: ஸ:

அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு. குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான் இதனையும் கூறுகிறது.

இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர், ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில் செய்வோர் என அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையில் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில், வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள் உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது. பிராமணனுக்கு சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே தங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக் கொண்டிருப்பார்களா? இன்று இந்திய சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

தங்களை எதிர்த்து இவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டும், எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்வி ஜாதியின் பெயரால் கெடுக்கப்பட்டும் அழுவது மட்டுமே அறிந்து, அழிப்பது அறியாத அப்பாவி பிராமணர்களை என்றுதான் இந்த தேசம் புரிந்து கொள்ளப் போகிறதோ சர்வேஷ்வரா!

மனு தர்மம் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம், அடுத்த கட்டுரையில்…

ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)
பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா  உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’

——- வளரும், வழித்தடைகள் விலகும் வரை —

தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டது

ஏப்ரல் 5, 2008

நான் எனது அடுத்த பதிவை பதிவிடுகையில், தவறுதலாக பிராமணர்கள் தமிழர்களா – பாகம் 2 பதிவை நீக்கி விட்டேன். அதை மீட்க wordpress ல் வழி வகை ஏதும் இல்லை. நல்ல வேளையாக அதை எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருந்தேன். ஆயினும், மற்றவர்கள் எழுப்பிய மறுமொழிகள், அதற்கு நான் அளித்த விடைகள் அனைத்தையும் மீட்க இயலவில்லை. Windows ல் உள்ளதுபோல் ஒரு Recycle Bin வசதி ஏன் WordPress ல் இல்லை?

பிராமணர்கள் தமிழர்களா? – பாகம் இரண்டு

ஏப்ரல் 5, 2008

முந்தைய பாகத்தில், பிராமணர்கள் தமிழர்களா, இல்லையா என்பதைப் பற்றியும், ஆரிய படையெடுப்பு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் அலசினோம். இந்த ஆதாரம் போதாது என்கின்றனர் சிலர். அவர்களிடம் ஆரிய படையெடுப்பை உறுதி செய்யும் ஆதாரங்களை நீங்கள் கொண்டு வாருங்கள் என்றால் பேச்சு, மூச்சைக் காணோம். எனது மறுமொழியில் சொன்னது போல், முன்பு ப்ளுட்டோ ஒரு கிரகம் என்று விஞ்ஞானிகள் சொன்ன போதும் நம்பினோம், இப்போது இல்லையென்று சொல்லும்போதும் நம்புகிறோம். ஆனால் இந்த ஆரியர்கள் விஷயத்தில் மட்டும் பழைய ஆதாரங்களை மட்டும்தான் நம்புவோம், இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மைகளை நம்ப மாட்டோம் என அடம்பிடிப்பது நியாய வாதமா, இல்லை துவேஷ வாதமா?

சரி. அப்படியே இவர்கள் சொல்வது போல் முதல் ஆராய்ச்சி முடிவுகளே உண்மை, இப்போது சொல்லப்பட்ட அனைத்தும் புரட்டு என்றே வைத்துக் கொண்டாலும், பிராமணர்கள் தமிழர்களே. ஒரு நாட்டில் பிறக்கும் குழந்தைக்கே அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும் போது, பல்லாயிரங்காலமாக தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்களை தமிழர்கள் அல்லர் என்று சொல்வது விந்தையிலும் விந்தை.  மற்றவர்களுக்கு தமிழ்ப் பற்றில் பிராமணர்கள் எவ்விதமும் குறைந்தவர்கள் அல்லர். தமிழுக்கு பிராமணர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள் அளப்பரியன. அருந்தமிழ்த் தொண்டாற்றிய அந்தணர்களைப் பற்றி எழுத ஒரு WORDPRESS போதாது. பேய்மழையில் ஒரு துளி போல, சில இங்கே.

 சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர் என நான்கு முக்கிய சைவ பெரியவர்களில் மூவர் அந்தணர்கள். மாபெரும் புலவர் கபிலர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், காளமேகப் புலவர் முதல் பாரதி, கல்கி, சுஜாதா வரை அனைவரும் பிராமணர்களே. உ.வே.சா இல்லையெனில் இன்று நாம் போற்றக் கூடிய பல அறிய தமிழ் நூல்கள் நமக்கு கிடைத்து இருக்குமா? தன் சொந்த செலவில், ஊர் ஊராய்ச் சென்று ஓலைச் சுவடிகளை சேகரித்து திருத்தமாகப் பதித்து வெளியிட்டு ‘அழியாது காத்த அண்ணல். தமிழ் காத்த தெய்வம். தண்டமிழ் இலக்கியம் வழங்கிய வள்ளல்’ என்று பலராலும் போற்றப் பட்டவர் உ.வே. சாமிநாத ஐயர்.

பெரும்பாணாற்றுப் படையும், பட்டினப்பாலையும் இயற்றிய உருத்திரங்கண்ணனார். திருவிளையாடல் படைத்த பெரும்பற்றப் புலியூர் நம்பி. ‘நாடகவியல்’ என நாடகங்களுக்கு தமிழில் முதலில் இலக்கணம் வகுத்த சூரிய நாராயண சாஸ்திரியார். இவ்வளவு ஏன்? தமிழுக்கே இலக்கணம் எழுதிய அகத்திய மாமுனியே ஒரு அந்தணரே.

இவர்கள் மட்டுமல்ல, எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல், விளம்பரம் தேடாமல், தமிழைக் காட்டி பிழைப்பு நடத்த முயலாமல், பெரும் தமிழ்த்தொண்டு ஆற்றிய பிராமணர்கள் ஆயிரக்கணக்கானோர் இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர், இருப்பர். இவையெல்லாம் உண்மை இல்லை, என்று யாராலாவது மறுக்க இயலுமா இல்லை மறைக்கதான் இயலுமா?
தமிழ், தமிழ் என்று பேசி ஓட்டை வாங்கி விட்டு தன் வீட்டு பிள்ளைகளை இந்தி படிக்க வைக்கும் தலைவர்கள் தமிழர்களாம்!  ஆனால் அமெரிக்காவில் இருந்தாலும் தன் மக்கள் தாய்மொழியாம் தமிழைக் கற்க வேண்டும் என்று ஆர்வம் காட்டும் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையாம்!

தமிழை காட்டு மிராண்டிகளின் மொழி என்று ‘வர்ணித்த’ ஈ. வே. ராமசாமி இவர்களுக்கெல்லாம் தமிழ்ப் ‘பெரியார்’. ஆனால் அந்த தமிழை பேசும் பிராமணர்கள் எதிரிகள்.

வீட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது என எந்த பாஷை பேசிக்கொண்டு இருந்தாலும், கழகங்களில் இருப்பதால் அவர்கள் தமிழர்களாம்! அனைவரிடமும் தமிழில் பேசி, இறைவனை சமஸ்கிருதத்தில் வணங்கி, தன் சுலோகங்களின் முடிவில் தன் கோரிக்கைகளை தமிழிலேயே வைக்கும் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையாம். இவையெல்லாம் வெறும் துவேஷங்களேயன்றி வேறென்ன?

அஹமன்ருதாத் சத்ய மு பைமி (யஜுர்)
பொருள்: நான் பொய்யை உதறி விட்டு உண்மையை ஏற்பேனாக
——-  தொடரும், அகத்தெளிவு பிறக்கும் வரை —–

பி. கு: பதிவின் தலைப்புக்கு தொடர்புள்ள விஷயங்களையும், வினாக்களையும் கொண்ட மறுமொழிகளையே நான் அனுமதிக்க இயலும். என் முயற்சி, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து அறிந்து உண்மையை ஏற்பவர்களுக்கே. மறுமொழி இடும் நண்பர்கள் நாகரிகம் கருதி நாவை அடக்குவது நல்லது.

பிராமணர்கள் தமிழர்களா?

மார்ச் 21, 2008

எங்கே நான் சென்றாலும், எந்த வலைப்பதிவைப் பார்த்தாலும், எந்த பின்னூட்டத்தைப் படித்தாலும், அனைவரும் எழுப்பும் ஒரு வினா இது. இதற்கு ஆதாரமாக அவர்கள் மேற்கோள் காட்டுவது ஆரிய படையெடுப்பும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வுகளும். இந்த ஆரியன், திராவிடன் என்ற பாகுபாடுகள் எப்போது தொடங்கின? சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இவையெல்லாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த பின்பே தொடங்கின என்பது விளங்குகிறது. அதற்கு ஏற்றாற்போல் ஆராய்ச்சி முடிவுகள் என்று சொல்லப் பட்ட அனைத்தும் ஆரியர்கள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இந்தியாவினும் நுழைந்து தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தி உள்ளனர் என்பதையே வலியுறுத்தின. ஆங்கிலேயர்கள் எதை சொன்னாலும் நம்பிய நம் மக்களுக்கு ஆதாரம் என்று அவர்கள் சிலவற்றை காட்டிய பின் இதுவே வேதம் என்று ஆனது. மதத்தின் பெயரால் இந்து, முஸ்லீம் என்று பிரித்திருந்த பிரிட்டிஷாருக்கு, இந்துக்களைப் பிரிக்க இது பெரிதும் உதவியது.

முதலில் ஆரியர், ஆரியர் அல்லாதோர் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம், நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர், வைசியர் என்று மருவி பின்பு ஆரியர் என்றால் பிராமணர்கள் என்றே நிலைபெற்றுள்ளது. ஆங்கிலேயர்கள் முதலில் ஆரிய பிரவேசம் பற்றி சொன்ன போது நம்பிய நம் மக்கள், இப்போது அது கட்டுக்கதை என்று நிரூபிக்கப் பட்டதை நம்ப மறுப்பது ஏன்? ஏனெனில் இந்த உண்மைகள் மக்களை சரியாக சென்றடையவில்லை. ஆரிய, திராவிட கட்டுக்கதைகளை தங்கள் சுய நலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கழகங்கள் இப்போது நிரூபிக்கப் பட்டுள்ள எதையும் ஏற்கவில்லை. மேலும் இவ்வுண்மைகள் மக்களை சென்றடையாமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்து முட்டுக் கட்டைகளையும் இட்டுக் கொண்டுள்ளனர். இவர்கள், தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? எது உண்மை, எது பொய் என்று ஆராய்ந்து அறிவது அன்றோ பகுத்தறிவு. 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பொய்யை நம்புவோம், இப்போது நிரூபிக்கப்படும் உண்மையை நம்ப மாட்டோம் என்று சொல்வது பகுத்தறிவா இல்லை மூட நம்பிக்கையா?

சரி. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் நமது வழக்கில் இந்த சொல் இல்லையா? இருந்திருக்கிறது. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் ‘மரியாதைக்குரிய’ என்ற பொருளுடன் புழக்கத்தில் இருந்திருக்கிறதே தவிர அது ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல்லாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ‘திராவிட’ என்பதும் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லே தவிர ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல் அல்ல. திராவிட நாடு என்பது இன்றைய தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கிய (தென்னிந்திய) பகுதியாகவே இருந்திருக்கிறது. எனவே திராவிடர்கள் என்றால் தமிழர்கள் என்று ஊளையிடுவது நம் கழகக் கண்மணிகளின் அறியாமையையே காட்டுகிறது.

http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html

மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று முழுதாக படித்துப் பார்க்கவும். ஆரிய படையெடுப்பு என்று நம்பப்படும் அனைத்தும் முட்டாள்தனமான கட்டுக்கதைகள் என்பது அப்பட்டமாக விளங்கும். இன்றைய கழகங்கள் இந்த புதிய ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். காலங்காலமாய் கூறப்பட்டு, கழகத்தின் பெயரிலும் அடிப்படை கொள்கைகளிலும் இடம்பெற்ற ஒரு விஷயம் பொய்யாவது, பொய் என்று ஏற்றுக்கொள்ளப்படுவது கழகத்தின் அடிப்படையை, ஆணி வேரை அசைத்துப் பார்த்து விடும். இந்து மதம் முழுவதும் உருவ வழிபாடும், வேத பாராயணங்களும் நிறைந்துள்ளன. வேதங்களில் முதன்மையானதும், தொன்மையானதுமான ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, அதற்கு முன்னரே இந்து மதம் இருந்திருக்கிறது. இந்த வழிமுறைகளும் இருந்திருக்கின்றன. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழை விடவும் பழைமையான இந்த வேதங்களால தமிழ் கலாசாரம் பாதிப்படைந்து விட்டது எனும் இவர்களது குற்றச்சாட்டை நினைத்து விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாது.

சரி. ஆரியர்கள் தங்கள் கலாச்சாரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கே விதைத்து விட்டனர், அவற்றை அகற்ற வேண்டும் என்று அலறும் நண்பர்களே, அதே போல் இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் புகுத்திய கலாச்சாரங்களையும் அகற்ற வேண்டும் என்று வாதிடுவீர்களா? காலத்தார் அழியாத எத்தனையோ அருமையான ஹிந்து படைப்புகளை தகர்த்தேறிந்தது மொகலாயர்கள் தானே? வெள்ளை புடவையிலும், வானம் பார்த்து ஏய்ந்த பூமி போல் குங்குமமற்ற நெற்றியுடனும், பெண்ணுக்கழகாம் பொன் சற்றும் இல்லாத ஏழைக்கோலத்திலும்; விதவைகள் போல் மதத்தின் பெயரால் இந்தியப்பெண்களை திரிய விட்டது கிறிஸ்தவ மதம் தானே? பகுத்தறிவு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்றால் இவற்றையும் கண்டிக்க வேண்டாமா நமது அருமை கழகங்கள்? இதனை திரிபுவாதம் என்று சொல்லி திசை திருப்ப முயல வேண்டாம். இந்துக்களுக்கும், பிராமணர்களுக்கும் எதிராக நீங்கள் போடும் அனைத்துக்கூச்சல்களும் உங்கள் நடுநிலையற்ற தன்மையையே பறைசாற்றுகின்றன.

—எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே— 

(வளரும், வழித்தடைகள் விலகும் வரை…)

அட ராமா, என்ன கொடுமை இது?

மார்ச் 16, 2008

நமக்கு சிறு வயதில் பிடிக்காத பாடம் என்று ஏதேனும் ஒன்று இருக்கும். கணிதம், ஆங்கிலம், அறிவியல், வரலாறு என்று ஏதேனும் ஒன்றை நாம் வெறுத்திருப்போம். நமது மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி அனேகமாக சரித்திரங்களை வெறுத்து இருக்கிறார். அதனால்தான் அவற்றை சரியாக படிக்கவில்லை போலும். அல்லது வயதாகி விட்டதால் புத்தி தடுமாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி திரிகின்றாரா என்பதும் தெரியவில்லை.

ஏற்கனவே ராமர் ஒரு குடிகாரர், மது அருந்தினார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். மது என்றால் சமஸ்கிருததில் தேன் என்று பொருள் என்பதை மறந்து விட்டார் பாவம். ராமர் என்ன இஞ்சினியரா? அவர் எவ்வாறு பாலம் கட்டினார் என்றெல்லாம் சிறு பிள்ளை போல் கேள்விகள் எழுப்பினார். இதெல்லாம் போதாதென்று, துளசி தாசரின் ராமாயணத்தில் ராமன், சீதையின் தமையன் என்று ஒரு குண்டை போட்டார். இவை எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்த இந்தியாவே ஆர்ப்பரித்த போது இந்துத் தமிழர்கள் மட்டும் அமைதி காத்தனர். ஏதோ எதுவுமே நடக்காத மாதிரி.
இப்போது மீண்டும் ஒரு தவறான ராமாயண உதாரணம் கொடுத்து பிரச்சனையை மீண்டும் ஆரம்பித்துள்ளார் திரு மு க. நேற்று வண்டலூரில் நடந்த காவல் துறை விழாவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது என்று எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிப்பது போல் ராமாயணத்தை (தவறாக) உதாரணம் காட்டியுள்ளார் அவர். அவர் முதலில் மகாபாராதத்தை எடுத்துக்க் கொண்டு, தர்மர் ஒரு சிறந்த அரசர். அவர் ஆட்சியில் நீதி நிலை பெற்றது ஆயினும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருந்தன என்று கூறி விட்டு பின் ஏன் ராமாயணத்தில் ராமரின் ஆட்சியில் சீதை கடத்தப் படவில்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். சீதை கடத்தப்பட்ட போது ராமர் அரசர் அல்ல என்பதும், பரதனே அரசன் என்பதும் இவருக்கு தெரியாதா? ஆனால் சாதுர்யமாக பரதன் ரமாரின் பாதுகைகளை வைத்தே ஆட்சி செய்தான் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கு முன் இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள், சீதை கடத்தப்பட்ட பஞ்சவதி பகுதி மகாராஷ்ட்ராவில், கோதாவரி ஆற்றின் அருகில் உள்ளது. ஆனால் ராமனும், பரதனும் ஆண்டதோ அயோத்தியா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மட்டுமே.
ஐயா கருணாநிதி அவர்களே, தங்களுக்கு தெரிந்த தமிழ் இலக்கியங்களில் இருந்து மட்டும் உதாரணங்களை கொடுங்கள். தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து ஏன் ஒவ்வொரு முறையும் மூக்கறு படுகிறீர்கள்? இதில் ராமாயணம் படிக்காத தமிழர்களின் நிலைமைதான் கொடுமையிலும் கொடுமை. இவர் சொல்வதை உண்மை என்று நம்பி ஏமாந்து கை தட்டிக் கொண்டிருக்கின்றனர். ராமா, நீதான் இவர்களை திருத்த வேண்டும்.