மனு தர்மமும், மானிடமும்

இந்து சாஸ்திரங்களுக்காக போராடும் நம் நண்பர்களே சிறிது அடங்கிப் போகும் ஒரு விஷயம் மனு ஸ்மிருதி. ஏனெனில், இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற ஒரு கருத்து அனைவரது (இந்துக்கள், பிராமணர்கள் உட்பட) ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.

பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும் தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா யுகத்திற்க்கானது. இதை கலி யுகத்தில் பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த முதல் தவறு. ஆயினும், மனு ஸ்மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.

முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள் அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது ஆச்சர்யமே!

மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.

பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?

‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம் நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான் அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி, சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம் ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி தவறாகத்தான் தெரியும்.

மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும் அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில் தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத் தகுந்ததாக கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ, குற்றங்களைத் தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.

பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான் இதையும் சொல்கிறது


                                       அஷ்டோபாத்யம் து சூத்ரச்ய
                                       ஸ்தேயே பவதி கில்பிஷம்.
                                       ஷோடசைவ து வைச்யச்ய
                                       த்வாத்ரிம்சத் க்ஷத்ரிச்ய  ச.
                                       ப்ராம்மனச்ய சது: ஷஷ்டி:
                                       பூர்ணம் வாபி சதம் பவேத்.
                                       த்விகுணா வா சது.
                                      ஷஷ்டி: தத் தொஷகுனா வித்தி: ஸ:

அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு. குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான் இதனையும் கூறுகிறது.

இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர், ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில் செய்வோர் என அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையில் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில், வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள் உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது. பிராமணனுக்கு சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே தங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக் கொண்டிருப்பார்களா? இன்று இந்திய சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

தங்களை எதிர்த்து இவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டும், எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்வி ஜாதியின் பெயரால் கெடுக்கப்பட்டும் அழுவது மட்டுமே அறிந்து, அழிப்பது அறியாத அப்பாவி பிராமணர்களை என்றுதான் இந்த தேசம் புரிந்து கொள்ளப் போகிறதோ சர்வேஷ்வரா!

மனு தர்மம் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம், அடுத்த கட்டுரையில்…

ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)
பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா  உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’

——- வளரும், வழித்தடைகள் விலகும் வரை —

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

6 பதில்கள் to “மனு தர்மமும், மானிடமும்”

 1. yekalaivan Says:

  பார்ப்பனீயம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மனிதர்க்குள் பிரிவினையும் இருக்கிறது என்று பொருள். பார்ப்பனீயம் என்றால் அது பார்ப்பனர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பார்ப்பனீய வேத, வருணாசிரம பிரிவினைக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுபவன் எவனும் பார்ப்பனீயத்தில் இருப்பதாகத்தான் பொருள். அந்த அடிப்படையிலேயே எமது பதில்கள் இங்கே பதிவிடப் படுகின்றன.

  உங்கள் மநுஸ்மிருதியால் “முடிவெட்ட, மலம் அள்ள, செருப்புத் தைக்க, பிணம் எறிக்க விதிக்கப்பட்ட சாதிகளால் ஆதாயம் அடையாதவர்கள் இங்கே யார் இருக்க முடியும்?”, இந்தச் சேவைகளைச் செய்வதனாலேயே இழிவுபடுத்தப்படும் இம் மக்கள் இன்றும் பார்ப்பனிய வருணாசிரம தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல், தலைமுறை தலைமுறையாகத் தவித்து வருவது எதனால்.

  இப்படி இழிவுபடுத்தப்படும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினால், ‘கலியகக் கொடுமைதாங்கல்லடா பகவானே’ என்று புலம்புபவர்களும் உண்டு. மநுஸ்மிருதியைத் தூக்கியெறிய முடியாமல் இன்று வரை அதற்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள உமது மேற்கண்ட எழுத்துக்கள், மீண்டுமொரு கிருதயுகம் வேண்டுவதாகவேத் தெரிகிறது.

  ஆனால் கலியுகத்திற்கும் கிருதயுகத்திற்கும் வித்தியாசம் உமக்கு வேண்டுமானால் வெளிப்படையாக இருக்கலாம். ஆனால் உழைக்கும் கூட்டத்தைச் சார்ந்த, பார்ப்பனீயத்தால் ‘இழிகுலம்’ என்று கீழ்மைப்படுத்தப்பட்ட எமக்கு எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. முந்தைய யுகம் எம்பாட்டன் வாயில் சாணிப்பால் ஊற்றியது, இன்றைய கலியுகம் எங்கள் வாயில் மலத்தைத் திணிக்கிறது. நன்றாக கவனிக்கவும் இத்தகைய கொடுஞ்செயலை நேரிடையாக எம்குலத்தின் மீது ஏவியது பார்ப்பனசாதியைச் சார்ந்தவர்கள் அல்ல, ஆனால் இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா, வருணாசிரம (அ)தர்மம் சரியாகக் கடைபிடிக்கப் படுகிறதா, என்று கண்கானித்து வந்தது மட்டும் தான் பார்ப்பனர்களின் வேலையாக இருந்தது.

  இன்றைக்கும் எம்மக்கள் வாயில் மலம் திணிப்பவன், சிறுநீர்கழிப்பவன் கையிலுள்ள ஆயுதம் என்ன தெரியுமா? அவனுடைய சாதிக் கொழுப்புதான். அது உமது வருணாசிரம
  நெறிகளைத்தான் தாங்கி நிற்கிறது.

  ”பார்ப்பனன் வேதம் ஓதுவதை ஒரு சூத்திரன் பார்த்தால் அவன் கண்களைப் பிடுங்கி எறியவேண்டுமென்றும், சூத்திரன் எவனாவது வேதமந்திரத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுக்க வேண்டுமென்றும், வேத வழிபாடுகளை அவன் பார்த்துவிட்டால் அவன் கண்களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்றெல்லாம் உமது மநுஸ்மிருதி வரையறுத்து/வலியுறுத்திச் சொன்னது உமது பார்வையில் படவில்லையா?

  நான் ஏதேதோ தடம் மாறி விவாதிப்பதாக நீங்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது. எனது கருத்துக்களின் பிறப்பிடமே கீழ்கண்ட உமது வரிகள்தான் என்பதையும் அறிக.
  /////மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது 48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல./////

  இந்தப் பிரிவினையின் மூலம் நெறிப்படுத்தப்பட்டது எந்த மக்களின் வாழ்வு என்று நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். உழைப்பவனை முடிந்த வரைச் சுரண்டி, மற்ற வருணத்தவர்கள் கொழுத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட அநீதியான இந்தக் குப்பையை நீதி நூல் என்று, இதனால் ஆதாயமடைந்தவனால் மட்டும்தான் சொல்லமுடியும்.

  நீங்கள் சொன்ன நால் வருணத்தில் எம்முடைய தாழ்த்தப்பட்டவனது இடம் என்னவென்று சொல்லவேண்டும். பிரம்மனின் தலைமுதல் கால்வரை எங்கும் இடமில்லாததினால், மனிதனாகக்கூட கருதமுடியாது என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்ட ‘பஞ்சமன்’ என்பவன் யார் என்றும் நீங்கள் இங்கு சொல்லவேண்டும்.

  சிறிது வேலைப்பளுவில் இருப்பதனால் சற்றுத் தாமதமானாலும், இன்னும் தொடர்வேன்…….

  ஏகலைவன்.

 2. Lakshminarayanan Says:

  ஏகலைவரே,

  //பார்ப்பனீயம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மனிதர்க்குள் பிரிவினையும் இருக்கிறது என்று பொருள். பார்ப்பனீயம் என்றால் அது பார்ப்பனர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பார்ப்பனீய வேத, வருணாசிரம பிரிவினைக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுபவன் எவனும் பார்ப்பனீயத்தில் இருப்பதாகத்தான் பொருள். //

  பார்ப்பனீயம் என்ற ஒரு கோட்பாடே அரசியலாளர்களால் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதே எம் வாதம். வேதங்களையும் வர்ணாசிரமக் கொள்கைகளையும் உருவாக்கியவர்கள் பிராமணர்கள் என்று நீர் கூறினால் அது உமது அறியாமையே. வேதங்களில் பாகுபாடு இல்லை. மனிதர்கள் உருவாக்கிய ஸ்மிருதிகளில் தான் பாகுபாடு உள்ளது. அதுவும் நான் ஏற்கனவே சொல்லியது போல், அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றாற்போல், மக்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டவை. கிருதா யுகத்திற்காக உருவாக்கப்பட்ட மனு ஸ்மிருதியை கலி யுகத்தில் பயன்படுத்தினால் அது பொருந்தாது. இந்த யுகத்திற்கான ஸ்மிருதி வேத வியாசரின் தந்தையான பராஷரரால் உருவாக்கப்பட்ட ‘பராஷர ஸ்மிருதி’. இப்படி ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  //பார்ப்பனன் வேதம் ஓதுவதை ஒரு சூத்திரன் பார்த்தால் அவன் கண்களைப் பிடுங்கி எறியவேண்டுமென்றும், சூத்திரன் எவனாவது வேதமந்திரத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுக்க வேண்டுமென்றும், வேத வழிபாடுகளை அவன் பார்த்துவிட்டால் அவன் கண்களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்றெல்லாம் உமது மநுஸ்மிருதி வரையறுத்து/வலியுறுத்திச் சொன்னது உமது பார்வையில் படவில்லையா?//

  இன்று சாதாரண செயலாகக் கருதப்படும் பலவும் அக்காலத்தில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டுள்ளன. இந்திய சட்டத்திலேயே பல திருமணம் என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது போல், மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்கள் அன்றைய மக்களின் வாழ்க்கை முறையை வைத்து உருவாக்கப்பட்டவை, அவை இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. நீங்கள் சொன்னதைக் கூறியதாக சொல்லும் அதே மனு தர்மம்தான் இதையும் கூறுகிறது.

  ‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
  க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

  அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இந்த முரண்பாடுகள் நமக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகின்றன. மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன் அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே மனுவின் நீதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

  //இந்தப் பிரிவினையின் மூலம் நெறிப்படுத்தப்பட்டது எந்த மக்களின் வாழ்வு என்று நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். உழைப்பவனை முடிந்த வரைச் சுரண்டி, மற்ற வருணத்தவர்கள் கொழுத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட அநீதியான இந்தக் குப்பையை நீதி நூல் என்று, இதனால் ஆதாயமடைந்தவனால் மட்டும்தான் சொல்லமுடியும்.//

  நான் ஏற்கனவே சொன்னது போல் மனுவின் தர்மத்தால் பிராமணர்கள் கொழுக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மனு பிராமணர்களை ஏழைகளாகவே பணிக்கிறான். பிச்சைஎடுத்தே உண்ண வேண்டும் என்று கூறுகிறான். கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறான். இதில், யார், யாரை சுரண்டுகிறார்கள் என்பதை நீர்தாம் கூற வேண்டும்.

  காலத்திற்கு ஒவ்வாத எந்த விஷயத்தையும் நாம் செய்வதில்லை. நான் சொல்ல விரும்பும் ஒரே கருத்து, மனு ஸ்மிருதி உருவாக்கப்படும் முன்னரே, வர்ணம் என்ற ஒன்று நிலை பெற்று விட்டது. மகாபாரதமும் இதை உறுதி செய்கிறது. ஆகவே அன்றிருந்த நிலைக்கேற்றவாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் யாரைக் குற்றம் சொல்ல இயலும்? இங்கு மட்டும் அல்ல, வரலாற்றை நீர் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், உலகம் முழுவதும் மக்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலேதான் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது விளங்கும். இன்றும் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் butcher, carpenter என அவர்களது குடும்பப் பெயர் அவர்கள் மூதாதையர் செய்த தொழில்களை குறிக்கும் வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது. எளிதாக சமுதாயத்தை மேலிட, நிர்வாகத்தை நடத்த இது ஆட்சி புரிவோருக்கு உதவியிருக்கிறது என்பது வரலாற்றில் இருந்து தெளிவாகிறது.

  மனிதர்களை ஒன்றாக பாவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நாத்திக கம்யுநிசமே, உள்ளவன்-இல்லாதவன், முதலாளி-தொழிலாளி என்று பிரிக்கத்தானே செய்கிறது. இது மக்களை எளிய வழியில் நெறிப்படுத்தவே அன்றி பாழ்படுத்த அன்று.

  சாதி என்ற ஒரு விஷயமே வேதங்களில் கிடையாது. இது பிற்பாடு நம் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அநாகரீகமான விஷயம். இந்துக்கள் சாதீயத்தைக் கடைப்பிடித்தனர் என்பதற்காக இந்து மதம்தான் ஊக்குவித்தது என்று கூறுவது முட்டாள்தனம்.

  //நீங்கள் சொன்ன நால் வருணத்தில் எம்முடைய தாழ்த்தப்பட்டவனது இடம் என்னவென்று சொல்லவேண்டும். பிரம்மனின் தலைமுதல் கால்வரை எங்கும் இடமில்லாததினால், மனிதனாகக்கூட கருதமுடியாது என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்ட ‘பஞ்சமன்’ என்பவன் யார் என்றும் நீங்கள் இங்கு சொல்லவேண்டும்.//

  கடவுளின் அனைத்து அங்கங்களும் ஒன்றாகவே கருதப்படுகின்றன. இதில் காலில் இருந்து தோன்றினால் என்ன, தலையில் இருந்து தோன்றினால் என்ன? இன்னும் சொல்லப்போனால் 90% வேதங்களும், பக்திப் பாடல்களும் கடவுளின் பாதங்களையே தொழுகின்றன. அப்படியானால், அவரது பாதங்களே உயர்வானவை அல்லவா? மற்ற மதங்களில் சொல்லப்பட்டதுபோல் ஒரு பிரிவு மக்கள் கடவுளில் இருந்தும், மற்றொரு பிரிவு மக்கள் சாத்தானில் இருந்தும் பிறந்தனர் என்று சொல்லாமல், அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லும் இந்து மதத்தில் தவறென்ன இருக்கிறது?

  தாழ்த்தப்பட்டவன் என்ற ஒரு பிரிவோ, தீண்டத்தகாதவன் என்னும் ஓர் பிரிவோ வேதங்களில் இல்லை. இந்த பேதங்கள் மக்கள் என்று தங்களைக் கருதிய மாக்களால் செய்யப்பட இடைச்செருகல்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், இந்தத் தவறை அனைத்து தரப்பினரும் இழைத்துள்ளனர். இதில், பிராமணர்களை மட்டும் சாடுவது எவ்விதத்தில் நியாயம்? இன்று பிராமணர்களை இந்திய சட்டம் கொண்டு கல்வி, அரசு வேலைவாய்ப்பு என அனைத்து பிரிவுகளிலும் ஒதுக்கிய பின்னும் இந்த துவேஷம் தொடர்வது ஏன் என்பதுதான் என் கேள்வி.

 3. தமிழன் Says:

  இன்னும் மனு தர்மத்தை பற்றி பேசும் உன்னை எல்லாம் என்ன செய்வது ?? உயிரோடு எரித்தால் கூட தகும் .

 4. Lakshminarayanan Says:

  நண்பர் தமிழன் அவர்களே, இது ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமெண்டேன்றாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். விவாதிக்கலாம்.

  மனுதர்மம் முழுதாக என்ன சொல்கிறது என்பதை அறியாமல், அது இக்கால நடைமுறைக்கு ஒத்து வருமா, வராதா என்பது புரியாமல், நான் என் கட்டுரையில் என்ன சொல்லியுள்ளேன் என்று தெரியாமல் வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கும் உங்களைப் போன்றோரைப் பார்த்துதான் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று சொல்லியுள்ளனரோ?

 5. கொடும்பாவி-Kodumpavi Says:

  அப்படீனா மனு தர்மம் யாரையும் தாழ்ந்தவன் உயர்ந்தவன்னு சொல்லவில்லைன்னு சொல்றீங்க.. ஆனா தற்கால மனு தர்மம் என்ன சொல்லுதுன்னு நீங்க ஏன் குறிப்பிடவில்லை..? பிற்பட்ட/முற்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தபட்ட என்று ஒரு ‘தர்மம்’ தற்போது நாட்டில் நிலவி வருகிறதே. அதை எதில் சேர்ப்பது? எல்லோரும் ஓர் குலம்ன்னு புத்தகத்தில் படிக்கும் மாணாக்கர்களை ஜாதிச் சான்றிதழ் வாங்க சொல்வது அவர்களை குழப்பும் இன்றைய அரசியல் தர்மம்.!

 6. naanum thamizhanthaan Says:

  Lakshminarayanan நண்பரே உங்களுக்கு எனது நன்றி! இதுபோல் நான் எங்கும் இதுபற்றி விளக்கம் கண்டதில்லை! நிதானமாகவும் அதே சமயம் நிதர்சனமாகவும் இருப்பது போல் என் மனதிற்குபடுகிறது.

  காலங்காலமாக இந்து மதத்தின் மீதான மதவாதிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை அறியாத நம் நண்பர்கள் இது குறித்து அவமதித்தும், எதிர்த்தும் கேள்விகளை கேட்கின்றனர். நாள்தோறும் நம்மை அடிமையாக வைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க இவர்களுக்கு தைரியமோ / நேரமோ இல்லை ஏனோ? அதுகூட வேண்டாம், ஒட்டுபோடும்போது கூட இந்த அரசியல்வாதிகளை (மனதளவில் கூட) கேள்வி கேட்க முடியாமல் இவர்களையே மீண்டும் தேர்ந்தேடுக்கின்றனர். “பிரம்மத்தை அறிந்தவனே பிராமணன்” – இதற்கு பூனூலோ, சாதி சான்றிதழோ வேண்டியதில்லை என்பது நம்மில் இன்று எத்தனை பேருக்கு தெரியும்?.தனது ஆட்சியை, சுரண்டலை தக்கவைத்துக்கொள்ள அரசியல் மற்றும் மதவாதிகள் நம்மை திசைதிருப்ப செய்த இவ்விசயத்தை நாம் ஏன் இன்னும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை?.

  மதத்தை வைத்து மனிதர்களை பிரித்தால் அனைத்து மதமும் சிறையில்தான் இருக்க வேண்டும்! விவேகானந்தரும் நித்யானந்தாவும் தோன்றியது ஒரே இந்து சமயத்தில்தான் – ஏசுவும் ஹிட்லரும் தோன்றியது ஒரே கிறிஸ்தவத்தில்தான் – ஒசாமாவும், முகமது நபியும் தோன்றியது ஒரே இஸ்லாமில்தான். மின்சாரத்தினால் இறப்பு நேரிடும் என்பதற்காக நாம் மின்சாரத்தையே ஒதுக்கி விட்டோமா என்ன? சக்தியை பயன்படுத்துவது நம் கையில் உள்ளது, அதற்காகத்தான் நமக்கு ஆறாம் அறிவும் உள்ளது. அதை பயன்படுத்தியவர்களுக்கு புரியும் மற்றவர்களுக்கு………………………………..?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.


%d bloggers like this: