இணையத்தில் பிராமண துவேஷம்

மார்ச் 14, 2008

என்று ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்தார்களோ அன்று ஆரம்பமானது இந்த பிரச்சனை. பிராமணர்கள் தமிழர்கள் அல்லர். அவர்கள் ஆரியர்கள். அவர்கள் தங்களது வழிமுறைகளை தமிழர்களிடம் புகுத்தி விட்டனர். அவர்களால்தான் இந்த சாதீயமுறை வந்தது. இவ்வாறெல்லாம் பல்வேறு அவதூறுகள். தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த திராவிடத் தலைவர்கள் இந்த விஷச் செடிக்கு நீர் விட்டது பத்தாது என்று அதை உரம் போட்டு வளர்த்து விட்டனர். ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு, பார்ப்பானை அடி’ என்று சொல்லும் அளவுக்கு துவேசத்தை தூண்டி விட்டனர். போதுமான வரையிலும் பிராமணர்களை கல்வி, அரசு வேலைவாய்ப்பு, சமூக மரியாதை என்று அனைத்து விதத்திலும் ஒதுக்கியாகி விட்டது. ஆகவே இந்த துவேஷங்கள் கொஞ்சம் குறைந்து இருந்தன.

இதெல்லாம் சற்றே ஓய்ந்திருக்கும் வேளையில் (இன்னும் கருணாநிதி போன்றோர் ஓயவில்லை என்பது உண்மை…அவரை யாரும் சட்டை செய்வது இல்லை என்பதும் உண்மை), இப்போது புதிதாக முளைத்திருக்கிறது ஒரு களை. கழகக் கண்மணிகளும், எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் தங்களை காட்டிக் கொள்ளும் அறிவிலிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் எதிர்ப்பை இணையத்தில் காட்டி வருகின்றனர். தமிழர்களிடம், ஏன் ஒரு தமிழனென்ற முறையில் என்னிடமும் உள்ள ஒரு பிரச்சனை, உணர்ச்சி வசப்படுவது. யாராவது எதாவது சொன்னால் முன் பின் யோசிக்காமல் அப்படியே நம்பி விடுவது. இது அரசியல் வாதிகளுக்கு பெரிதும் பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுக் கொண்டிருக்கிறது, இப்படியே தமிழன் தூங்கிக் கொண்டிருந்தால் அப்படியே பயன்படும். இல்லையென்றால் இந்தி திணிப்பை காரணம் காட்டி ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? அவர்களுக்கு எப்போதெல்லாம் ஒரு காரணம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் பிராமண துவேஷம் அவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது.

சரி. இவர்கள் ஏன் மற்ற எந்த உயர் சாதி என்று சொல்லப்படும் யாரையும் குறி வைக்காமல் பிரமணர்களை மட்டும் தாக்கி வருகின்றனர்? ஏனென்றால், பிராமணர்கள் மைனாரிட்டி. மொத்தத்தில் தமிழகத்தில் 3 சதவீதத்துக்கு குறைவாகவும், இந்திய அளவில் 5 சதவீதத்துக்கு குறைவாகவும் உள்ள ஒரு சமூகம்.
அந்த ஓட்டும் ஒரே இடத்தில் இல்லை. வன்னியர்கள் வட தமிழ்நாடு, நாடார்கள் சிவகாசி, விருதுநகர் பகுதிகள், தேவர்கள் ராம்நாடு, முஸ்லிம்கள் வாணியம்பாடியில் உள்ளதைப் போல் பிராமணர்கள் மட்டுமே பெருவாரியாக வாழும் தொகுதியோ அல்லது பகுதியோ எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் ஒன்று இரண்டு இடங்களிலும் அவர்களை ஏய்த்து சமாளித்து விடுகின்றன கழகங்கள். உதாரணம் S.V.சேகர் மைலாப்பூர். இருக்கும் கொஞ்ச நஞ்ச பெரும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தெரியாது. ஒற்றுமை கிடையாது. என்ன சொன்னாலும் கேட்க நாதி கிடையாது. இந்த தைரியத்தில்தான் ஒன்றும் தெரியாத ஜடங்கள் கூட தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக்கொண்டு திரிகின்றன.

அவர்கள் எழுதுவதிலாவது ஏதாவது உண்மையோ இல்லை தக்க காரணமோ இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு முண்டம் பிராமணப் பெண்கள் சினிமாவில் நடிப்பதை பற்றியும் கற்பைப் பற்றியும் எழுதுகிறது. கற்பு என்பது பிராமணப் பெண்களுக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? இன்னொன்று பிராமணர்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய கூடாது, கடல் தாண்டக் கூடாது என்று வேதம் சொல்லியுள்ளது. உண்மைதான். மனிதம் மறந்து நசுக்கப்பட்டால் பாவம் பிராமணர்கள்தான் என்ன செய்வர். வேதம் குறிப்பிட்ட வாழ்கை முறை ‘brain drain’ஐ தவிர்க்க அக்காலத்தில எடுக்கப்பட்ட முயற்ச்சிஆனால் அவ்வாறு வாழ குடுப்பினையோ வழிமுறைகளோ இன்றைய பிராமணர்களுக்கு வழங்கப்படவில்லை.
ராமர் பாலம் கட்டிதான் இலங்கைக்கு சென்றார் என்பதை உதாரணமாக கொடுக்கிறார் ஒருவர். ராமர் சத்ரியர் என்பதையே மறந்து விட்டது அந்த ஜடம். இதெல்லாம் போதாதென்று ஏதோ எல்லா வேதங்களையும், உபநிஷதங்களையும், மனு ச்மிரிதியையும் படித்து விட்டது போல் ஏகப்பட்ட உளறல்கள். நான் ஏதாவது உதாரணத்துடன் மறுமொழி கொடுத்தால் அதையும் மறுத்து விடுவது.
சரி. நான் என்னதான் சொல்ல வருகிறேன்.

இவ்வாறு தூற்றத்தக்க வகையில் பிராமணர்கள் இப்போது என்ன தவறு செய்கிறார்கள்? மற்றவர்களைப் போல், ஏன் மற்றவர்களை விட்ட ஒழுக்கமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வரும் சக தமிழர்களை ஏன் இவ்வாறு இகழ வேண்டும்? ஏன் சம நிலையில் உள்ள அப்பாவிகளின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டும்? எந்த பிராமணனும் இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. எந்த பிராமணனும் பேருந்துகளை கொளுத்துவது இல்லை. பிராமணர்களுக்கு என்று ஒரு அரசியல் கட்சி கிடையாது. கோரிக்கைகள் கிடையாது. இருந்தும் இந்த துவேஷம் ஓயவில்லை. எனவே பொறுத்துப் பார்த்து பயனில்லை என்று, உண்மைகளை வெளிக்கொணரவும், பல பேர் முகமூடிகளை கிழித்தெறியவும் நான் இந்த பதிவை எழுத வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் பட்டேன்.

சரி, இவர்கள் சொன்ன, சொல்கின்ற அனைத்தும் தவறு என்று சொல்கிறேனே அதற்கு ஆதாரம் உண்டா? ஆதாரம் வேண்டுமெனில் சோ எழுதிய ‘வெறுக்கத்தக்கதா பிராமணியம்’ என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும். இத்தனை நாள், அரசியல் கட்சிகளும், தலைவர் என்று கொண்டாடப்படும் சிறிய மனிதர்களும் எவ்வாறு தமிழர்களை ஏய்த்து வருகின்றனர் என்பதும் அப்பட்டமாக விளங்கும். இப்புத்தகம் மைலாப்பூர் கபாலி கோவில் குளத்திற்கு எதிரே உள்ள ‘Alliance Company’ல் கிடைக்கும். விலை 35 ரூ மட்டுமே. இதை ‘Giri Trading’லும் வாங்கலாம்.

நான் இனி வரும் நாட்களில் இப்புத்தகத்தில் இருந்து சில முக்கிய தகவல்களையும், உண்மைகளையும், வாதங்களையும், என் கருத்துகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து படித்து தெளிவடையுங்கள். என் முயற்சிக்கு உங்கள் ஆதரவுக்கரம் மிகவும் அவசியம். எந்த விதமான தர்க்கத்துக்கும் நான் தயார்.

—– லோக சமஸ்தா சுகினோ பவந்து —-
(தொடரும், அகத்தெளிவு பிறக்கும் வரை)

Advertisements

இரவு, இசை, இளையராஜா

மார்ச் 3, 2008

ஒரு இனிமையான இரவு நேரத்தில், தனிமையில் இசை கேட்பது என்பது மிகவும் அற்புதமான விஷயம். அதிலும் இளையராஜாவின் மெலடி என்றால் சுகம் பன்மடங்கு பெருகுகிறது. நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கையில் எனது வீட்டில் கணினி வாங்கினோம். அன்றிலிருந்து இரவில் அதிக நேரம் விழித்து இருப்பதும், பாடல் கேட்பதும் என் வாழ்வின் அங்கங்களாகி விட்டன. முதலில் நான் புதிய பாடல்கள் மட்டுமே கேட்டு வந்தேன். பின் நாளாக நாளாக இளையராஜாவின் இசை எனை மெதுவாக ஆட்கொள்ள ஆரம்பித்தது. அன்றிலிருந்து, இன்று வரை அநேகமாக வாரத்த்திற்கு ஒரு முறையேனும் கேட்பது வாடிக்கையாகி விட்டது. அதிலும், தர்மபத்தினி படத்தில் வரும் ‘நான் தேடும் ஸெவ்வந்தி பூ இது’ பாடலின் தொடக்கத்தில் இளையராஜாவின் குரல் உங்களை வேறோர் உலகத்திற்கே அழைத்து செல்லும். சூரியன் பண்பலையில் இரவு 11 மணிக்கு மேல் அத்தனையும் முத்தான பாடல்கள்.

‘குழலினிது யாழினிது என்பர் ராஜாவின்
இன் பாடல்கள் கேளாதார்’

நீங்கள் ஏற்கனவே ராஜாவின் பாடல்கள் கேட்காவிடில் உடனே தொடங்குங்கள். காலம் போனால் திரும்ப வராது. எனக்கு மிகவும் பிடித்த ராஜாவின் பாடல்கள் பாடல்கள் பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

எனது முதல் தமிழ்ப்பதிவு

மார்ச் 1, 2008

‘தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’

வணக்கம். ஆயிரம் மொழிகள் நாம் அறிந்திருந்தாலும் தாய் மொழியில் பேசும்போது, எழுதும் போது கிடைக்கும் ஆனந்தம் மற்ற மொழிகளில் கிடைப்பதில்லை. இணையத்தில் தாய் மொழியில் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இன்று மெய்ப்பட்டது. எப்போதுமே எனக்கு தமிழின் மீது மட்டற்ற மரியாதையையும், பற்றும் உண்டு. எனது கருத்துக்களை, தமிழில், தமிழ் நெஞ்சங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பதிவு. அவ்வப்போது வரும் ஆங்கில வார்த்தைகளை அர்ஜெண்டுக்கு ஆங்கிலம் வந்தால் தவறில்லை என பொறுத்தருளவும். முடிந்த வரை அடிக்கடி பதிய முயற்சிக்கிறேன். வாசித்து மறுமொழி இடவும். நன்றி.